க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக கூறப்படும் இரசாயனவியல் வினாப்பத்திர வினாக்கள் மூன்று தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
உதவிப் பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட டியுசன் ஆசிரியரிடம் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆசிரியர் உண்மையில் எதிர்பார்க்கை வினாக்களாக இவற்றை வெளியிட்டிருந்தாரா? அல்லது வேறு வகையிலான முறைகேடுகளா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் தகவல் அறிந்த எவரும் பொலிஸில் சென்று வாக்குமூலம் அளிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.