உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை உயர் தரப் பரீட்சையின் இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சைகள் இடம்பெற்றன. பகுதி 2 இற்கான பரீட்சைகள் இவ்வாறு இடம்பெற்ற நிலையில் இரசாயனவியல் பகுதி 2 இன் மூன்று கேள்விகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் கம்பஹா பகுதியில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றுக்கு முன்பாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இம்முறை தான் அனுமானித்த கேள்விகள் பரீட்சைக்கு வந்துள்ளதாகவும் எனவே வெற்றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறுவனத்தில் மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களை அழைக்கும் விதமாகவே இந்த துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டு பரீட்சையை எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுப் பிரசுரத்தில் உயர்தரப் பரீட்சையின் போது கேட்கப்பட்டிருந்த மூன்று பிரதான வினாக்கள் அப்படியே அச்சொட்டாக உள்ளடக்கப்பட்டிருந்தன. வினாக்கள் அப்படியே பரீட்சை வினாத் தாளிலிருந்ததை அவதானித்துள்ள மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் வினா பத்திரம் ஏற்கனவே வெளியாகிவிட்டதா என்ற சந்தேகத்தில் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர். அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந் நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் விடயத்தை பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து கம்பஹா பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதால் விசாரணைகள் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புசல்லவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புசல்லவின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ லால் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணைகளில் பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. எனினும் பரீட்சையின் இடை நடுவே யாரோ ஒருவர் அந்த கேள்விகளை மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் வழங்கியுள்ளார் என்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்ததாக கூறப்படும் கந்தான, பட்டகம பகுதியைச் சேர்ந்த இருவரை முதலில் கைது செய்தனர்.
துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியரின் 67 வயதான தந்தையும் 29 வயதான சகோதரருமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரிடமும் கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீ லால் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய கம்பஹா – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அச்சகம் ஒன்றினை நடத்தும் 42 வயதான நபர் ஒருவரை, குறித்த துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டமை தொடர்பில் பொலிஸார் கைது செய்தனர்.
இம் மூவரிடமும் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகள் வெளியே வந்த நிலையில், இந்த மோசடியின் பின்னணியில் 10 இலட்சம் ரூபா ஒப்பந்தம் ஒன்று உள்ளமையும், பரீட்சையின் இடை நடுவே கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் ஒருவன் ஊடாகவே பரீட்சை வினாத் தாள் வெளியில் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இந்த மோசடியின் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தி கொள்ளும் பொறுப்பு குற்றப் புலனய்வு பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
பிரபல குற்ற விசாரணையாளரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் கட்டுப்பாட்டில் விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது முதலில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் பல் வைத்தியரையும் அவரது மகனையும் கைது செய்தனர். காரணம், குறித்த வைத்தியரின் மகனே வினாப் பத்திரத்தை வெளியே கசிய விட்டவராவார். அத்துடன் தனது மகனுக்கு விடை சொல்லி கொடுக்க மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபாவினை வைத்தியர் செலுத்தியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவரவே அவரும் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கைதுகளின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களே மிஷன் இம்பொஷிபல் பாணி மோசடி நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்தது.
ஆம், கமல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொழும்பு பிரபல பாடசாலை உயர் தர விஞ்ஞான மாணவன். தொழில் நுட்ப விடயங்களில் திறமை வாய்ந்த அவனுக்கு, அவனது திறமை காரணமாக கனடாவில் புலமைப் பரிசில் ஒன்று கூட கிடைத்துள்ளதாம். எனினும் கமலின் தந்தையான பொலிஸ் வைத்தியசாலையின் பல் வைத்தியருக்கு தனது மகன் வைத்தியர் ஆக வேண்டும் என ஆசை.
இதனாலோ என்னவோ கமலை உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கச் செய்துள்ளார். இந் நிலையிலேயே அப்பிரிவில் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றிய கமல் தனக்கு தெரிந்த தொழில் நுட்ப அறிவினை பயன்படுத்தி மோசடி செய்து பரீட்சை எழுதவும் தயங்கவில்லை. காரணம் எப்படியேனும் வைத்தியராகி விட வேண்டும் என்ற தந்தை, மோசடி செய்யவும் உறுதுணையாக இருந்தமையே.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய விடயங்களை நாம் தருகின்றோம்.
கமல் உயர்தரப் பரீட்சையில் எப்படியேனும் சித்தியடைய வேண்டும் என்பதற்காக பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பொரளை கொட்டா வீதியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலை வைத்தியரின் மாடி வீட்டிலேயே தீட்டப்பட்டுள்ளது. முதலில் பரீட்சைக்கு விடையளிக்க கமல் தனது தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி கருவிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதன்படி இணையம் ஊடாக சிறிய ஸ்கேனிங் கெமரா, புளூடூத் உபகரணம் உள்ளிட்டவற்றை கமல் சீனாவில் இருந்து கொள்வனவு செய்துள்ளார். அதன் பெறுமதி 900 அமெரிக்க டொலர்கள் என அறிய முடிகின்றது. இதற்கான பணம் தந்தையான பொலிஸ் வைத்தியசாலை வைத்தியரின் பெயரில் உள்ள கடன் அட்டையினால் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கெமரா சிறிய கெமராவாகும். பாடசாலை சீருடையின் பொத்தான் போன்று உள்ள அந்த கெமராவை, பொத்தானாக பயன்படுத்தியே கமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அந்த கமராவை இயக்கும் சுவிட்ச் காலில் சப்பாத்தினுள் சூட்சுமமாக மறைத்து வைக்க முடியுமானது. அந்த சுவிட்ச்களை விரல்களினால் இயக்கும் போது பொத்தான் வடிவில் உள்ள கமரா வினாபத்திரத்தை படமெடுத்து, மற்றொரு சுவிட்ச்சை அழுத்தும் போது மெசஞ்ஞர் ஊடாக கமலின் பேஸ் புக் உள் பெட்டிக்கு செல்ல முடியுமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கமலின் பொரளை வீட்டில் இருக்கும் மேலதிக வகுப்பு ஆசிரியர் வினாக்களை பார்த்து விட்டு, விடையை மெசஞ்ஞர் அழைப்பு ஊடாக கமலுக்கு சொல்லி கொடுத்துள்ளார். மெசஞ்ஞர் அழைப்பு ஏற்படுத்தி பதிலை சொல்லிக் கொடுக்கும் போது அதனை கிரகிப்பதற்கான புளூடூத் உபகரணம் கமலின் காதுகளுக்குள் இருந்துள்ளது. இதுவும் யாரும் கண்டறிய முடியாததான, காந்தம் கொண்ட கடிகார மின்கலன்களின் அளவினை கொண்ட புளூடூத் உபகரணமாகும்.
இந்த தொழில் நுட்பங்கள் ஊடாக கமல் ஏற்கனவே உயிரியல் பாடத்துக்கும் விடை எழுதியுள்ள போதும் அவன் சிக்கவில்லை. அதற்காக உயிரியல் பாட மேலதிக ஆசிரியர் ஒருவர் விடையினை சொல்லிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இரசாயனவியல் பரீட்சையின் போதும் இதே பாணியில் விடை எழுதியுள்ளார். அதன் போதும் சிக்கவில்லை. எனினும் அந்த வினாப்பத்திரத்துக்கு விடை சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மேலதிக பண மோகத்தில் வடிவமைத்த துண்டுப் பிரசுரத்தினால் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவையனைத்தும் மாட்டி வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் பரீட்சைக்கு முன்னர் இந்த மோசடி தொடர்பில் ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது. பொரளை கொட்டா வீதியில் உள்ள கமலின் வீட்டில் மேல் மாடியில் கமல் மாதிரி வினாப் பத்திரம் ஒன்றுக்கு விடையளிக்கும் போது இதே தொழில் நுட்பத்தில் மாதிரி வினாப் பத்திரம் ஒன்றுக்கு விடையளிக்கும் போது இதே தொழில் நுட்பத்தில் கீழ் மாடியில் இருந்து ஆசிரியர்கள் விடை சொல்லிக் கொடுத்து இந்த ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் தற்போது, கமலுக்கு உதவிய அல்லது ஒப்பந்த அடிப்படையில் உதவிய மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு பொலிஸ் குழு ஒன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று சட்டத்தரணியூடாக இரசாயனவியல் ஆசிரியர் கம்பஹா நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது அவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பரீட்சை மோசடி தொடர்பில், இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அவரது வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை இரசாயன வியல் ஆசிரியருக்கு மேலதிகமாக அவரது தந்தை, சகோதரர், கம்பஹா அச்சக உரிமையாளர், கமல் மற்றும் கமலின் தந்தையான வைத்தியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாளை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் உயிரியல் ஆசிரியரை தேடிய வேட்டையை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.