பரீட்சை நிலையம் செல்லாது பரீட்சை எழுதிய மூவர்

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், பரீட்சை மண்டபத்திற்கு செல்லாமல் பரீட்சார்த்திகள் மூவர் பரீட்சைக்கு தோற்றினர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய மாணவியொருவர் வைத்தியசாலையிலும் வெள்ளத்தினால் பரீட்சை மண்டபத்திற்கு செல்லமுடியாதிருந்த மாணவர் இருவர் சன சமூக நிலையத்திலும் பரீட்சைக்கு தோற்றினர்.

தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தனி புன்சரணி என்ற மாணவியே தம்புள்ளை வைத்தியசாலையில் வைத்து பரீட்சை எழுதியுள்ளார்.

இதற்கு வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பன தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

இதேவேளை, போபத்தலாவை தெரங்கலையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இரண்டு மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாக பரீட்சை திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து பிரதேச செயக அதிகாரிகள் மூவர், டிங்கி வள்ளத்தின் மூலம் தெரங்கலைக்கு சென்று அங்குள்ள சனசமூக நிலையத்தில் வைத்து அவ்விரு பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை நடத்தியுள்ளனர்.

Related Posts