கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் நிறைவு செய்யப்பட்டிருக்காவிட்டால் பரீட்சைகளை தாமதமாகலாம்.
எனினும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான இறுதி தீர்மானம் இது வரை எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வீரகேசரிக்கு தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,
சமூக வலைத்தளங்கள் அல்லது இணையதளங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
இது தவறான செய்தியாகும். கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் வழமையைப் போன்று தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே தான் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் எந்தளவிற்கு நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது மீளாய்வு செய்யப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதே தவிர பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இதே வேளை கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை மாணவர்களுக்கு பயிற்சிக்குரிய காலத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக மார்ச் 27 தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 05 ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன என்றார்.