Ad Widget

பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் வடக்கு – கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது.

2 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. ஒப்பந்த நிறுவனத்தின் ஊடாக இந்த வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சீன ஒப்பந்த நிறுவனம் ஒன்றும், இந்த வேலைகளை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்திருந்தது.

குறித்த சீன நிறுவனத்தினால், யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மல்லாகத்திலும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாயிலுமே இந்தப் பரிசோதனை வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பில் வடக்கு – கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியிருந்தன.

அதில், வீடமைப்புத் திட்டத்தைப் பயனாளிகளிடம் கையளித்து அவர்களே மேற்கொள்ளும் வகையில் முன்னெடுக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தியிருந்தன.

இவ்வாறானதொரு நிலையிலேயே, ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பரிசோதனை வீடுகள் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts