கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் பிரதானமான இடத்தில் அமைந்துள்ள இந்தக் காணியில் அப்பகுதி மக்களுக்கான பண்ணைத்திட்டம் அல்லது தொழிற்துறைக்கான நிலையங்களை அமைக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவம் இவ்வாறு காணிகளை அபகரித்தல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த விடயத்தை தங்கள் கவனத்திற்கு எடுத்து இக்காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி கிடைக்க உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.