கிளிநொச்சி – பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் செல்லும் பெண்களிடம் தங்கச் நகைகளை அறுத்து செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(வியாழக்கிழமை) காலை அலுவலக கடமைக்காக சென்று கொண்டிருந்த கிராம அலுவலரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியினை அறுத்துச்சென்றுள்ளனர்
குறித்த சம்பவம் ஏ-35 வீதியின் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் முரசுமோட்டை அண்மித்த பகுதியில் வீதியால் பயணித்த பெண்ணொருவரிடம்; அவரை பின் தொடர்ந்து நேற்றுமுந்தினம்(புதன்கிழமை) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்துக்கு அன்மித்த பகுதியிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை பின்தொடர்ந்து வந்த இருவர் அவர்களை தள்ளி விழுத்தி சங்கிலியை அபகரித்துச் செல்ல முற்பட்ட சமயம் குறித்த பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக இவ்வாறான சம்பவம் இந்தப் பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலையில் தற்போது முரசுமோட்டை புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.