பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று சமர்பிப்பு

யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த காணாமல் போனோர் ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதியன்று நிறைவுக்கு வந்தது.

இதனையடுத்து குறித்த ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை தயாரித்துவந்த நிலையில் இன்று பிற்பகல் அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம ஐ.பி.சி தெரிவித்தார்.

முன்னாள் நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைக்கு அமையவே இந்த காணாமல் போனோர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

யுத்தத்தின்போதும், அதற்குப் பின்னரும் காணாமல் போனவர்கள் பற்றிய சாட்சியங்களைப் பதிவு செய்து அறிக்கை தயாரித்து ஜனாதிபதிக்கு வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்த ஆணைக்குழு செயற்படத் தொடங்கியது.

காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்து ஆறு மாதங்களில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என குறித்த ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு சாட்சியப் பதிவுகளை அந்த ஆணைக்குழு முன்னெடுத்தது.

எனினும் காலஅவகாசம் போதாத காரணத்தினால் மேலும் ஒரு மாதங்களிற்கு ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்கும்படி கோரப்பட்ட வேண்டுகோளிற்கு அயைம ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து குறித்த ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அல்லது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் நீண்டகாலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல், இராணுவ வசமிருக்கும் காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட முக்கியமான பரிந்துரைகளை பரணகம ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையில் முன்மொழிந்திருந்தது.

அதுமட்டுமன்றி காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக 4 குழுக்கள் 2015ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை மிகவும் பாரதூரமான விடயங்களை சுமந்துவந்த பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதோடு நாடாளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடும் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பிலும், ஸ்ரீலங்கா அரச படையினர் பக்கத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கவில்லை, 10 ஆயிரத்திற்கும் குறைந்தவர்களே பலியாகியிருக்கலாம் என்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டதோடு, அரசிற்குள் பல்வேறு குழப்பமான நிலையும் தோன்றியது.

அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்கில் வெள்ளைவான் கடத்தல், ஈ.பி.டி.பி போன்ற அமைப்புக்களின் கடத்தல்கள் போன்றன தொடர்பிலும் இரண்டாவது இடைக்கால அறிக்கையில் பரணகம கூறியிருந்தார்.

அத்துடன் பொது மக்கள் மீதான ஷெல் தாக்குதல் தொடர்பில் பதிவாகிய சாட்சியங்கள் குறித்து விசாரணை தேவை என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது.

மேலும் மக்களது ஒட்டுமொத்த 20 ஆயிரம் முறைப்பாடுகளிலும் ஐயாயிரம் முறைப்பாடுகள் ஸ்ரீலங்கா படையினருக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜுலை 15ஆம் திகதி நிறைவுக்கு வருவதாக தெரிவித்திருந்த அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, மூன்றாவது இடைக்கால அறிக்கையை தயாரிப்பதற்கும், குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாம் தரப்பினரை விசாரிப்பதற்கும் காலஅவகாசம் இல்லாததினால் ஆயுட்காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிப்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி வழங்காததினால் ஆணைக்குழு கடந்த மாதம் கலைக்கப்பட்டதோடு தற்போது இறுதி இடைக்கால அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts