விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பகிரதி முருகேசு உட்பட 8 பேர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 39 பேரது வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
பிரான்ஸிலிருந்து தனது பிள்ளையுடன் நாட்டை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டிருந்த பகிரதி முருகேசு உட்பட ஏழு பேரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கத்திற்கு உதவி புரிந்ததாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுடன் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகளும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இதன்படி 18 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்தார்.