பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை மூன்று வருடங்களுக்கு பின்னர் யாழ். மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளது. தொல்புரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிகரன் (வயது 29) என்பவரே மூன்று வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமொன்றில் வைத்து இராணுவத்தினரால் இவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் செல்வரட்ணம் சசிகரனினால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம்; 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி மு.ரெமீடியல் ஆஜராகியிருந்தார். சந்தேக நபரினால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ். மேல் நீதிமன்றினால் கடந்த 5 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டதுடன் வேறு சான்றுகள் உள்ளனவா? என பரிசீலனை மேற்கொள்ளும் முகமாக வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி வேறு சான்றுகள் இல்லை என மன்றில் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த சந்தேக நபரை யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்தார்.

அத்துடன், இவரினால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கிற்கான திகதி வரை சிறைச்சாலை காவலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts