பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதானவர்களுடைய உறவுகளின் கண்ணீர்!!!

women_crinigபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது கணவனை பார்வையிட்டுத்திரும்பிய பெண் ஒருவர் தான் எதிர்நோக்கிய சிரமங்களை இவ்வாறு விவரிக்கிறார்.

கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் எனது கணவரும் கைது செய்யப்பட்டார். நாங்கள் வன்னியில் இருந்து வந்ததைத் தவிர நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை.

எந்த ஒரு அறிவித்தலும் இல்லாது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு வவுனியாவிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் இன்னும் விடுதலை செய்யவில்லை.

நாங்களும் இன்றைக்கு விடுவார்கள் நாளைக்கு விடுவார்கள் என எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் இதுவரை அவர்கள் விடவில்லை. பூசா தடுப்பு முகாமில் எந்தவொரு விசாரணையும் இன்றி தடுத்து வைத்துள்ளனர்.

அவரது உழைப்பில் மட்டுமே நாங்கள் வாழ்ந்து வந்தோம். பாடசாலை செல்லும் பிள்ளைகள் இரண்டு பேர் உள்ளனர். தற்போது அவரும் இல்லை, எவ்வாறு நாங்கள் எங்களுடைய வாழ்க்கையினைக் கொண்டு செல்வது??.

எங்களுக்கு யாரும் உதவி செய்வதற்கும் இல்லை. இதற்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் இருந்து பூசாவிற்கு பஸ் மூலம் செல்ல போவதற்கு மட்டும் 850 ரூபா தேவைப்படுகின்றது.

பிள்ளைகளை விட்டுச் செல்வதற்கும் யாரும் இல்லை. அதனால் எல்லோருமே செல்ல வேண்டுடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துச் செய்வதற்கே இருக்கின்ற பணம் முடிகின்றது.

இவ்வாறு எத்தனை குடும்பங்கள் துன்பப்படுகின்றனர். எங்களது இந்த நிலையினை யாரிடம் சொல்ல. தட்டிக் கேட்பதற்கு கூட யாரும் இல்லையா? என கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Posts