பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குங்கள் : ஐ.நா

இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.

தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது.

இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த குழுவினர் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அந்த குழுவினர், தன்னிச்சையான தடுத்துவைத்தல்கள் காரணமாக, இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும், பாதுகாப்புப் படையினர், நீதித்துறையினர் மற்றும் ஏனைய அதிகார சபைகள் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பொறிமுறைகளுடன் செயற்படுவது தொடர்பிலும் சித்திரவதைக்கு எதிரான சமவாயத்தின் விருப்பத்திற்குரிய ஆரம்ப வரைபிற்கும் இலங்கையின் இணக்கப்பாட்டையும், சாதகமான முன்னெடுப்புக்களையும் ஐ.நா அங்கீகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இலங்கையின் கடப்பாடுகளைச் செயற்படுத்துவது மற்றும் அரசாங்கத்;தின் 2017-2021 தேசிய மனித உரிமைகள் நடவடிக்கைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள் அவசியமாவதாக அவர்கள் வலியுறுத்தினர்.

குறிப்பாக அதிகமாக விளக்கமறியல் சிறைகளைப் பயன்படுத்துதல், தடுத்து வைப்பதற்கான செயற்திறன் குறைந்தமாற்று வழிமுறைகள், காலம் கடந்த சட்ட நடைமுறைகள், அனேகமான சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் அல்லது வலுக்கட்டாயமாகப் பெறும் குற்றஒப்புதல் வாக்குமூலங்களில் தங்கியிருத்தல், என்பன உடனடியாகக் கவனம் செலுத்தி மறுசீரமைப்புக்களுடன் அணுக வேண்டிய சில முக்கிய பிரச்சினைகளாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நியாயமற்ற முறையில் கால வரையரை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், நீதிமன்ற நடவடிக்கைள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுத்துவைப்பட்டோர், குறிப்பாக கைது செய்யப்படும் தருணத்திலிருந்து, அவர்களின் தொடக்க வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கு முன்னர், சட்ட உதவி பெறுவதற்கு உடனடியாக அணுகக் கூடிய வகையில், உரிய நடவடிக்கைளின் ஒருசில அடிப்படை உறுதிப்பாடுகளை அனுபவிக்க முடிவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஹோஸே அன்ரோனியோ குவேரா பர்மூடாஸ், லீ டொமே, மற்றும் எலினா ஸ்ட்டீனர்ட் ஆகியோரை உள்ளடக்கிய இந்த குழு கடந்த 12 நாட்களாக இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது.

குறிப்பாக கொழும்பு, நீர்கொழும்பு, அநுராதபுரம், வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கு இவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்து, சுதந்திரம் இழக்கச் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts