பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதா? அரசு உறுதி வழங்கவில்லை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஒருபோதும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெரும் குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கோ அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கோ அரசாங்கம் இணங்கியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புலி சந்தேகநபர்களை விடுவிப்பதாக நாம் ஒருபோதும் உறுதிமொழி வழங்கவில்லை.

அதேநேரம் புலி சந்தேகநபர்களின் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு விசேட நீதிமன்றம் எதுவும் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தால் விசேட நீதிபதியொருவரின் கீழ் ஆணைக்குழுவொன்றே அமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யுத்தத்தின் பின்னர் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவற்றைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. இதனால் சர்வதேச அழுத்தங்கள் நாட்டுக்கு ஏற்பட்டது.

குறுகிய காலத்தினுள் அமைச்சர் மங்கள சமரவீர பாரிய சேவையாற்றியுள்ளார். 1948 முதல் ஆசியாவில் சிறந்த வெளிவிவகார சேவை இங்கு காணப்பட்டது. ஆனால் இராஜதந்திர உறவுகளில் அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டதால் இராஜதந்திர சேவை பாதிக்கப்பட்டது.

பாலித கொஹன வெளிநாட்டுப் பிரஜை இவரே கடந்த காலத்தில் இந்தப் பதவி வகித்தார். முக்கிய நாடுகளுக்கு வௌிநாட்டு பிரஜாவுரிமையுள்ளவர்கள் நியமிக்கப்பட்டதால் எமது வெளியுறவுச் சேவை பின்னடைவைச் சந்தித்தது.

யுத்த காலத்தில் மனித உரிமை மீறப்படுவது தவிர்க்க முடியாதது. யுத்தம் முடிவடைந்த பின்னராவது மக்களின் மனித உரிமை நிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தோம். கடந்த அரசாங்கத்தின் மனித உரிமை மீறலைத் தடுக்கவில்லை. அரசாங்கமும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது.

எமது நாட்டிற்கு மீண்டும் நற்பெயரை ஏற்படுத்த ஜனாதிபதியும், பிரதமரும்,, வெளிவிவகார அமைச்சரும் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். குறுகிய காலத்தில் பாரிய மாற்றம் மேற்கொண்டு ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற சுதந்திரம் என்பவற்றை நிலைநாட்ட முடிந்திருப்பது குறித்து சமந்தா பவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.

சீனாவுடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது சீனாவுடன் 5 ஒப்பந்தங்கள் செயற்பட்டது. சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவுடன் உறவு வலுப்பெற்றுள்ளது. சமமான நட்பு நாடுகளாக இவற்றுடன் செயற்பட்டு வருகிறோம். இறைமையுள்ள நாடென்ற வகையில் எமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

Related Posts