பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

army-ruwan-vanikasooreya

பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்குவதற்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, அடையாளம் காணப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 424 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதில் மூன்று நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 8 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைதன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுக்கு அமைய குறித்த மூவரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரங்களும் பட்டியலில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்த தடைபட்டியலில் இருந்து ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வேண்டுமாயின் அவர் தொடர்பிலான தகவல்கள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறும். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென இராணுவ பேச்சாளர் கூறினார்.

இந்த நடைமுறையானது இலங்கையில் மாத்திரமல்லாமல் ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான நடைமுறையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த 424 பேர்களில், பிரான்ஸை சேர்ந்த கே.துரைரட்ணம், இந்தியாவை சேர்ந்த கே.சுதர்சன் மற்றும் இலங்கையரான த.பிரேமணி ஆகிய மூவரின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளன.

Related Posts