பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்க வடக்கு மாகாண அமைச்சரவை ஒப்புதல்

north-provincial-vadakku-npcவடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு வடக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.

வடக்கு மாகாணசபையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த ஆண்டு வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு 6 மில்லியன் ரூபாவும், அமைச்சர்கள் 4 பேருக்கும் 5 மில்லியன் ரூபாவும், உறுப்பினர்களுக்கு 2.5 மில்லியன் ரூபாவும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தமக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாதென்று தெரிவித்த உறுப்பினர்கள், நிதியை அதிகரித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற முதலமைச்சர், உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலில், அதிகரித்த நிதி ஒதுக்கீடு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

கைதடியில் அமைக்கப்பட்டு வரும் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் கட்டிட நிர்மாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே, உறுப்பினர்களுக்கான மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஒதுக்கீட்டின் பிரகாரம் உறுப்பினர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும், அமைச்சர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், முதலமைச்சருக்கு 6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆயினும் அதற்கான அனுமதியை வடக்கு மாகாண அமைச்சரவை கடந்த வாரமே வழங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, புதிய நிதி ஒதுக்கீட்டுக்கு அமைய உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி வழங்கப்படவுள்ளது.

Related Posts