ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.
எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது.
அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது.
நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.
அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.
நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது.
அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.
எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும்.
தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.
இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது.
அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.
சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.
தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம்.
பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.