பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுனர்

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தானும் தன்னுடைய அமைச்சரவையும் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று ஆளுனருக்கு கடிதம் அனுப்பினார்.

இதற்குப் பதிலளித்து ஆளுனர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்பதாகவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும்வரை அவர் பொறுப்பில் நீடிக்க வேண்டுமென்றும் ஆளுனர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா பிப்ரவரி ஐந்தாம் தேதி தேர்வுசெய்யப்பட்டதையடுத்து, தனது பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

புதிய முதலமைச்சராக சசிகலா பதவியேற்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related Posts