பன்னாட்டு அழுத்தங்களிலிருந்து மஹிந்தவை காப்பாற்ற திரு சம்பந்தன் முற்படுகிறார் என்று குற்றம்சாட்டி திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களால் நீண்ட அறிக்கை ஒன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது !தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2001ஆம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் இதனைப் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பலபேர் கோரி வந்ததையும் திரு.சம்பந்தன் அவர்கள் அறிவார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர், இதன் தேவை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் அவர் அறிவார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க அதனைப் பதிவு செய்ய தமிழரசுக் கட்சி தயாரில்லை என்பதை அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தபொழுது இருந்த களநிலைமை என்பது வேறு.விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் பலமாக இருந்தனர். பேரம் பேசும் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தார்கள்.
புலிகளுடனேயே பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பும் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டின் பின்னர் உள்ள கள நிலைமை என்பது வித்தியாசமானது.
தமிழ் மக்களின் ஒற்றுமை என்பதைத் தவிர, வேறுபலம் எதுவும் எமக்கிருக்கவில்லை. எனவே, அந்த ஒற்றுமை என்ற பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் அனைவரும் விரும்பினோம். ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் தனிவழி செல்ல விரும்பியது. இன்றும் தனிவழிதான் செல்கின்றார்கள்.
விடுதலைப் புலிகள் ஆயுதரீதியில் மௌனிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தேவைகளுக்காகவும், பேச்சுவார்த்தையின் தேவைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை.அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாது. மாறாக, தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் பாவிக்கப்பட வேண்டுமென அக்கட்சியின் தலைமை நிர்ப்பந்திக்கின்றது.
அண்மைய கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்னர் கட்சிகள், இயக்கங்கள் என்ற அடிப்படையை விட்டு, சரியான காத்திரமான வேட்பாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் அதற்காக ஒரு வேட்பாளர் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் திரு.சம்பந்தனாலும் மாவை சேனாதிராஜாவினாலும் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
13 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்களும், ஏனைய நான்கு கட்சிகளுக்கு 3 இடங்களும் கொடுக்கப்பட்டது. 14 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 9 இடங்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெற்றது.
இவ்வாறான ஒரு சர்வாதிகார தேர்தல் கூட்டைத்தான் திரு.சம்பந்தன் விரும்புகிறார்போல் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பதன் மூலம் திரு.சம்பந்தன் அவர்கள் பேசுவதையும் செய்வதையும் ஏனையோர் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றது.
திரு.சம்பந்தரைப் பொறுத்தவரையில், அரசியல் முடிவுகளை எடுக்கும்பொழுது ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசுவதென்ற நிலை அவரிடம் இருந்ததில்லை. ஜெனிவா மாநாட்டிற்கு முன்பாக நாங்கள் ஜெனிவாவிற்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினையை விளக்குவோம் என்று உலகம் முழுவதிற்கும் அறிவிப்பார். ஆனால் பின்பு தான் தனித்துவமாக ஒரு முடிவெடுத்து ஜெனிவாவிற்குப் போவதில்லை எனவும் அறிவிப்பார்.
அதனை நியாயப்படுத்த உப்புச் சப்பற்ற காரணங்களையும் புதிதுபுதிதாகக் கண்டுபிடிப்பார்.
யாழ்ப்பாணத்தில் இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக் கொடியை உயர்த்திப்பிடிப்பார். ஆனால், இது தவறென்று முன்னர் தமிழரசுக் கட்சி கூறியதென நாம் எடுத்துச் சொன்னால் ஆண்டாண்டு காலமாக இதனை நான் ஏற்றிவருகின்றேன் என்று அதனையும் நியாயப்படுத்துவார்.அதுமட்ட
பல சமயங்களில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகு முன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் திரு.சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக் கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார்.
திரு.சம்பந்தன் அவர்களும் இச்சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டும் இச்சந்திப்புக்களின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கு வரும் வெளிநாட்டு அழுத்தங்களைக் குறைக்கவே முயற்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டும் திரு.சம்பந்தன் அவர்கள் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். இந்தத் தொடர் சந்திப்புக்கள் கூட தனிப்பட்ட சந்திப்புக்களாகவும் கூட்டமைப்புடன் கலந்துரையாடாத சந்திப்புக்களாகவுமே இருந்து வந்துள்ளன.
இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிற்கு மக்கள் கொடுத்த ஆணையை யார் சிதைத்து வருகின்றார்கள்? திரு.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியா? அல்லது கூட்டமைப்பில் உள்ள வேறு யாருமா? என்பதனை மக்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம்.
கூட்டமைப்பைப் பற்றிப் பேசும் திரு.சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பு வலிமை பெற வேண்டுமென்றும், கொள்கைரீதியாக ஒன்றுபடக் கூடிய ஏனைய கட்சிகளும் கூட்டமைபபுடன் வந்து இணையலாம் என்றும் அதுதொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார்.
அதேசமயம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது அடையாளங்களைப் பேணலாம் என்றும் ஆலோசனை கூறுகின்றார்.
மேற்கண்ட இரண்டு விடயங்களுமே ஒன்றுக்கொன்று முரணான விடயங்களாகும். கூட்டமைப்பு வலிமைபெற வேண்டுமானால் முதலாவதாக அது ஒழுங்கமைக்கப்பட்ட சகல அமைப்பு வடிவங்களையும்கொண்ட கட்சியாக மாற்றம் பெறவேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் பாரிய பொறுப்பை தலையில் சுமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளாவிட்டால்
வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்றிட்டம் இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் வலிமையான தமிழத் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிப் பேசுவது பொதுமக்களை ஏமாற்ற உதவுமே தவிர, ஆக்கபூர்வமான செய்தியாக இருக்காது.
அதேசமயம் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அடையாளங்களைப் பேணவேண்டுமெனில், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தமக்கான அலுவலகங்கள், தமக்கான மகாநாடுகள், தமக்கான அமைப்புக்கள் எனச் செயற்பட வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் கிராம மட்டங்களில் தமக்கான கட்சிக் கிளைகளை நிறுவ ஆரம்பித்தால் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமா அல்லது இடைவெளி அதிகரிக்குமா? வயதில் மிகவும் மூத்த அரசியல்வாதி தமிழ் மக்களின் தலைவர் என்று சொல்லக்கூடியவர் எங்களுக்குத் தரும் ஆலோசனை இதுதான். தனித்துச் செயற்படுங்கள். உங்களது அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் வலுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முடியும். இவற்றையெல்லாம் நாம் யாரிடம் சொல்லி அழுவது? கட்சிகளென்று வந்தாலே ஒருவர்மீது ஒருவர் சேறுபூசுவதுதான் இயற்கை. ஐந்து கட்சிகளும் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தால் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்க முயற்சிப்பார்களா அல்லது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கட்சிகள் தனித்தனியாக இயங்கலாம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக? வெறுமனே வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவா? எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே தேர்தல் கூட்டல்ல. அது எமது மக்களின் விடுதலைக்கான ஒரு ஸ்தாபனம் என்றே நாமும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்க்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட விலை கணக்கிட முடியாதது. அதற்காகப் பல தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியொரு தமிழரசுக் கட்சியின் நலனுக்காக அவைகளைப் புறந்தள்ளிவிட முடியாது.
தமிழரசுக் கட்சியையோ, அல்லது வேறு எந்தக் கட்சிகளையுமோ அழித்துவிடும்படி நாம் கூறவில்லை. அவர்களது கட்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு, இன்றைய தேவையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும்படிக் கூறுகின்றோம்.
தீர்வு அண்மித்துவரும்பொழுது, கூட்டமைப்பைச் சிதைக்க இடமளித்தால் அதனால் அரசே இலாபம்பெறும் என்றும் அவர் கூறுகின்றார். திரு.சம்பந்தன் அவர்களின் கூற்று நூறுவீதம் உண்மையானது.
கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழரசுக் கட்சியால் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட பொழுதும், ஒற்றுமை கருதியும் தேர்தலின் வெற்றிகருதியும் ஒன்றாகச் செயற்பட்டோம்.
அவர்கள் தமிழரசுக் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தபொழுது நாம்
கூட்டமைப்பிற்காகப் பிரச்சாரம் செய்தோம். மட்டக்களப்பில் எமக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஆசனங்களில் நான்கைக் கைப்பற்றியதன் மூலம் 80வீத ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை நிலைநாட்டினோம்.
திருமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றே வெற்றியடைந்தார்கள்.
இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக்கட்சிக்கல்ல என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கௌரவமாக நடாத்தப் பழகுங்கள். நாம் தமிழ் மக்களின் சுயமரியாதையை நிலைநாட்டவே போராட வந்தோம். அது எமக்குள்ளேயே இல்லாமல் போவது வருத்தத்திற்குரியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
தேர்தலில் வெல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வென்றபின் தமிழரசுக் கட்சி என்னும் போக்கினைக் கைவிடுங்கள்.
இவற்றை நீங்கள் செய்தால் கூட்டமைப்பும் சிதைந்துபோகாது, அரசும் இலாபம் ஈட்ட முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதில் தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் முன்னணிப் பாத்திரத்தை விகிக்கின்றீர்கள்.
உங்கள் நடவடிக்கையின் மூலம் ஏனைய கட்சிகளை ஓரம் கட்ட முயற்சிக்கின்றீர்கள். இன்னும் சொல்லப்போனால் ஏனைய கட்சிகளுக்குள்ளும் பிளவை உருவாக்க முயற்சிக்கின்றீர்கள்.
இவை அனைத்திற்கும் நீங்கள் பொறுப்பாக இருந்துகொண்டு கட்சியை வேறு யாரோ சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்று சாரப்பட உங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசுவது அவர்களை ஏமாற்றுவதற்கே தவிர, வேறல்ல. உங்கள் உட்கட்சிப் பேச்சானது சகல ஊடகங்களிலும் வெளிவந்ததால், மக்கள் உண்மையை அறிய வேண்டி ஒருசில விடயங்களை இங்கு நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுவாகவும் இறுக்கமாகவும் கொண்டுசெல்ல இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. அதற்கு வலுவான தலைமைத்துவம் தேவை. தமது கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்துபவரால் அதனைச் சாதிக்க முடியாது.
வவுனியாவில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும், அண்மையில் நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் பிரச்சார சமயங்களில் பொதுமக்களாலும், புலம்பெயர் சமூகத்தினராலும் கூட்டமைப்பை ஏன் பதிவுசெய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இனியாவது காலம் தாழ்த்தாமல் கூட்டமைப்பைப் பதிவுசெய்வதற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
தமிழ் மக்கள் ஆணை தந்திருப்பது அரசியல் ரீதியாக குறைந்தபட்சம் ஒரு சமஷ்டி அரசை உருவாக்கவும், அதனை நடைமுறைப்படுத்த ஓர் வலுவான கூட்டமைப்பை உருவாக்குவதற்குமே.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திரு.க.பிரேமச்சந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
யாழ் மாவட்டம்.