பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் இதில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
உள்ளூர் உற்பத்திகளை நவீன தரத்திற்கேற்ப உற்பத்தி செய்வது மட்டுமல்லாது அவற்றுக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதுடன், துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கீரிமலை வீதி, பெரியவிளான் பண்டத்தரிப்பில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் இப் புதிய வெல்ல உற்பத்தி நிலையத்திற்கான நினைவுக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்து, புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்ததுடன், வெல்ல உற்பத்தி தொழிற்கூடங்களையும் தொழிற்துறை நடவடிக்கைகளையும் பார்வையிட்டனர். அத்துடன், விற்பனை நடவடிக்கைகளும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்புதிய கட்டிடம் கனேடியா சர்வதேச அபிவிருத்தி நிதியத்தின் நிதிப்பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. 21 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெற்றுள்ள இந்நிலையத்தினூடாக நாளொன்றுக்கு 1,200 போத்தல்களில் கருப்பனியை அடைக்க முடியும்.
இதன்போது வலி தென்மேற்கு பிரதேச செயலர் முரளிதரன், கூட்டுறவு ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அருந்தவநாதன், யு.என்.டி.பி பிராந்திய முகாமையாளர் ஞானகணேசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.