Ad Widget

பந்து தாக்கி ஹெல்மெட் பறந்தது: ‘லாரி மோதியது போன்று உணர்ந்தேன்’

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியை புனே பவுலர்கள் 121 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர்.

_The-ball-struck-the-helmet-flewIt-felt-like-a-truck_SECVPF

அசோக் திண்டா, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய புனே அணி ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் டக்வொர்த்–லீவிஸ் விதிப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது ரஹானே (42 ரன்), ஜார்ஜ் பெய்லி (8 ரன்) களத்தில் இருந்தனர். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட புனே அணிக்கு இது 4–வது வெற்றியாகும். 6–வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே–ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

முன்னதாக டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே (ஆஸ்திரேலியா) வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்து புனே பேட்ஸ்மேன் ஜார்ஜ் பெய்லியின் (இவரும் ஆஸ்திரேலிய வீரர் தான்) ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அதாவது பந்து பெய்லியின் பேட்டின் முனையில் பட்டு அப்படியே எழும்பி அவரது ஹெல்மெட்டை தூக்கியது. இதில் ஹெல்மெட் தனியாக கழன்று கீழே விழுந்தது. ஒரு கணம் பெய்லி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து பின்னர் பெய்லி கூறும் போது, ‘இதன் தாக்கத்தை என்னை விட டி.வி.யில் பார்த்தவர்கள் தெளிவாக கண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப வேகமாக லாரி எனது முகத்தில் மோதியது போன்று உணர்ந்தேன். நல்லவேளையாக புதிய வகை ஹெல்மெட்டை பயன்படுத்தியதால் தப்பித்தேன். ஹெல்மெட் கீழே விழுந்ததும் அது உருண்டு ஸ்டம்பு மீது பட்டு விடாதா? என்ற ஏமாற்றத்தை ஒரு சில வீரர்களிடம் பார்த்தேன். மற்றவர்கள் எனக்கு என்ன ஆனதோ? என்று அருகில் வந்து விசாரித்தனர்’ என்றார்.

Related Posts