பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுத்திட்டம்!

Samurdhiவறுமை நிலையிலுள்ள 10000 குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபை பத்து நாள் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

எதிர்வரும் மே 31 ஆம் திகதி முதல் ஜூன் 10 ஆம் திகதி வரை இதற்கான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் வறுமை நிலையிலுள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம் என சமுர்த்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பந்துல திலகசிறி தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிதியுடன் கொடி விற்பனை நலன் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டும் சமுர்த்தி சங்கங்கள் மூலமாக நிதி சேகரிக்கப்பட்டும் இதற்கான நிதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் உண்மையில் கஸ்டமான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை சம்பந்தப்பட்ட கிராமத்தவர்களிடமே ஒப்படைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு தொடர்பான செயற்றிட்டங்களையும் சமுர்த்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தொடர்பான கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதியும் வறுமை நிலை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்திற்காக செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாழ்வெழுச்சித் திட்டத்தின் மூலம் குடும்பங்களின் வறுமைக்கு ஒரு காரணியான புகைத்தல் பழக்கத்தை குடும்பங்களிலிருந்து இல்லாதொழிப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக இத்தகைய குடும்பங்களுக்கும் மேற்படி திட்டத்தில் முன்னுரிமையளிக்கப்படும்.

குடும்பத்தின் பொருளாதாரம் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப வசதி இல்லாத குடும்பங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் தேவைகள் ஆராயப்பட்டு இத்திட்டத்தின் மூலம் அவர்களை கை தூக்கி விடுவதே முக்கிய நோக்கமெனவும் அவர் தெரிவித்தார்.

சமுர்த்தி அதிகார சபை பிரதி வருடமும் இத்தகைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் இம்முறை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கஸ்டமான குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் இலக்கில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts