நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் ஹுலுகல்ல அறிவித்துள்ளார்.
இலங்கையில் அவை உரிய முறையில் குறித்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படாவிடின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பதிவு செய்யாமல் நாட்டுக்குச் சேவையாற்றும் தோரணையில் அரசைக் கவிழ்க்க அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொள்ள மோசடிகளில் ஈடுபட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட அரச சார்பற்ற நிறுவனங்கள் இரகசியமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்கப்பட மாட்டாது.
எனவே, அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும்.
பதிவு செய்யாமல் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுலாக்கி அந்த நிறுவனங்கள் நாட்டில் இயங்குவதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் அலுவலகப் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றும் தேசிய பாதுகாப்பு ஊடக நிறுவன பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
2010 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும் வண்ணம் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலும் கண்காணிப்பின் பேரிலும் இந்த வேலைத்திட்டம் அமுலாகிறது. நாட்டில் நூறு அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் நாட்டின் அபிவிருத்தி, சேமநலன் என்ற தோரணையில் நாட்டுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் சதிகளை மேற்கொள்ளும் அநேக நிறுவனங்கள் இயங்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் தொடர்பாக இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முறையில் சில அதிகாரிகளை ஏமாற்றி கம்பனிகள் அமைப்பில் இலாபம் பெறாத நிறுவனங்களாகப் பதிவு செய்துள்ளமையும் வெளியாகியுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தில் 1994 பெப்ரவரி 26ம் திகதி பதிவு செய்த பின்னர் 2006 ம் வருடத்திலும் திருத்தப்பட்ட வர்த்தமானி அபிவிருத்தியின் பிரமாணம் அதில் அடங்கியுள்ள நிபந்தனைகளை சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் அமுல்படுத்த வேண்டுமென சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றில் வேலை செய்யும் நபர்கள், அவர்களைப் பதிவு செய்தல், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதி விபரம், செலவு விபரங்களை கொண்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் பற்றி மத்திய வங்கியிலுள்ள இதற்கான விசேட பிரிவிலும் அறிக்கை செய்யப்படுவது கட்டாயமாகும்.
இந்த நிறுவனங்களின் செயற்பாடு நிறுவனங்கள் மீதான முறைப்பாடு ஆகியவற்றை கண்காணிப்பதற்காக புத்திஜீவிகள் குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.