பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை: இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு!!

பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்படும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில் காசாவில் மின்சாரம் துண்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் தரப்பினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பகுதியிலுள்ள ஹமாஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரையில் 1,300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் தரப்பினர் 150 இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள சுமார் 25 அமெரிக்க பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவர், அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Related Posts