‘பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டே முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றெமீடியாஸ் கூட்டமைப்பை விட்டு சுதந்திரக் கட்சிக்கு தாவினார்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களான கனகரத்தினம் விந்தன், அ.பரஞ்சோதி, எஸ்.ராஜதேவன் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்கள்,
‘ கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முடியப்பு றெமிடியாஸ் வெற்றிபெற்றார்.
இவரை யாழ்.மாநகர சபையின் முதல்வராக்கும் நோக்கத்துடனே நாங்கள் எங்கள் பிரசாரத்தையும் முன்னெடுத்தோம். முதல்வராகும் எண்ணத்துடனேயே இவரும் தேர்தலில் போட்டியிட்டார். அவ்வாறு முதல்வரானால் பல சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்து இவரிடம் இருந்துள்ளது.
மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரிடம் சென்றபோது அது கேள்விக்குறியானது. 2010 ஆம் ஆண்டில் இருந்து இவர் கட்சி தாவுதவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.
அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுதல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை விமர்சித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கையை இவர் மேற்கொண்டு வந்தார்.
இவர் தொடர்பாக எமது கட்சியின் தலைமைப் பீடத்திடம் 12 முறைப்பாடுகள் முன்வைத்தோம். விசாரணைகளுக்காக எமது தலைமைப்பீடம் 3 முறை அழைத்த போதும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
எங்களை விமர்சித்து ஈ.பி.டி.பி. யுடன் தான் இணையப்போறார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார். இந்த கட்சியில் இவர் இணைந்துகொண்டது பதவி, பணம் என்ற சலுகைகளைப் பெறுவற்கே தவிர வேறு ஒன்றுக்கும் இல்லை.
அத்துடன் அண்மையில் மல்லாகம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எங்களை மந்தைகள் என்று விமர்சித்துள்ளார். இனிவரும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகளை அவர் நிறுத்தவேண்டும். இவ்வாறு எங்கள் மீதான அவதூறுப் பிரசாரங்களை இவர் மேற்கொண்டு வந்தால் நாங்கள் இவருக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க நேரிடும்’ என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி
13ஆவது திருத்தத்தினை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: யாழ். மாநகரசபை எதிர்க்கட்சி