பதற்ற சூழலை உருவாக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்

எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், பொது நூலகத்திற்கு அண்மையாகவுள்ள வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பிறந்த நாளையொட்டி இன்றைய தினம் (22) ஏற்பாடு செய்யப்பட்ட குடாநாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

அமைச்சர் அவர்கள் மேலும் உரையாற்றும் போது, இன்றைய நிகழ்வானது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் தலைமையிலும், ஏற்பாட்டின் கீழும் நடைபெறுகின்றது. அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடைகளும், பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பிறந்தநாளையொட்டியதாகவும், நல்லெண்ணத் திட்டமாகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டிற்கு பல்வேறுபட்ட நல்ல காரியங்களைச் செய்துள்ளார். எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற நிலை இருந்து வந்த போதிலும், நீடித்து நிலையான அமைதியை ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளமைக்கு அமைச்சர் அவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

ஒருகாலகட்டத்தில் எமது மாணவர்கள் நிம்மதியாகக் கல்வி கற்க முடியாமலும், வளங்கள் இல்லாத நிலையும், தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். ஆனால், இன்று ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலைகளுக்கான வளங்களை அரசு தந்துள்ளது. இதனடிப்படையில் தான் கடந்த ஆண்டு ஏனைய மாகாணங்களை விடவும், வடமாகாணம் கல்வி நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தகால தவறான அரசியல் தலைமைகளால் எமது மாணவர்களின் கல்வி நிலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும், தற்போது முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் கல்வி நிலையில் மேலும் முன்னேற்றம் காண வேண்டும்.

இந்நிலையில், கிடைக்கின்ற வாய்ப்புகளை சுயலாபத்திற்காக சுயலாப அரசியல்வாதிகள் பயன்படுத்தியதின் காரணமாகவே, எமது மக்கள் துன்ப துயரத்தைச் சந்தித்தார்கள். அதுமட்டுமன்றி, மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் முயற்சித்து வருகின்றார்கள் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், எதிர்காலத்தில் மக்கள் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டார்கள் என்றும், இது விடயம் தொடர்பில் மக்கள் தற்போது உணரத் தொடங்கியிருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் யாழ். தேவி யாழ்ப்பாணத்திற்கு வந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதனைப் புறக்கணித்திருந்ததுடன், மக்களைப் புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு அந்நிகழ்வை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண சபைக்கென அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்களுக்குச் சென்றடைவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையாக இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்க வேண்டுமென பகிரங்க அறைகூவலையும் அமைச்சர் அவர்கள் இதன்போது விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பிறந்தநாளையொட்டி தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடைகளை வழங்கி வைத்த அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.

ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து, மதகுருமார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மதகுருமார்கள், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டனர்.

bi1

bi6

bi7

Related Posts