பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்

இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசு முன் வைக்காதவரை இந்த நாட்டில் அமைதியும் நிம்மதியும் ஏற்படப் போவதில்லையயன்பது நிறுத்திட்டமான உண்மை. விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி என்பது தற்காலிகமான ஒரு விடயம். இனப் பிரச்சினைக்கான தீர்வென்பது விடுதலைப் புலிகளுடன் மட்டும் தொடர்புபட்டதாயின் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததோடு அந்தப் பிரச்சினை நின்று போய் இருக்கும்.

ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்டது. அதனால்தான் முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தை புலிகளின் தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்க முடிந்தது. விடுதலைப் போராட்டத்தின் அத்திபாரம் முதல் கட்டுமானம் வரை இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அநியாயங்கள், அட்டூழியங்கள், உரிமை மறுப்புக்கள் என்ற கற்களைக் கொண்டமைந்தது. அதனால்தான் விடுதலைப் போராட்டத்தில் பல அமைப்புகள் தோற்றம் பெற்றன.

மண் விடுதலையயன்ற மகுட வாசகத்தோடு எந்த அமைப்புத் தோற்றம் பெற்றாலும் அதற்கு தமிழ் மக்களின் ஆதரவும் தமிழ் இளைஞர்களின் அர்ப்பணிப்பும் இருந்தது என்ற வரலாற்றை இலங்கை அரசுகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தீபம் ஏற்றி விட்டார்கள். தமிழ் மக்கள் சிலர் தங்கள் வீடுகளில் கார்த்திகைத் தீபத்தை அன்றைய தினம் ஏற்றிவிட்டார்கள் என்பதற்காக பொலிஸாரும் படையினரும் பட்டபாடு-அடைந்த கோபம் -கொண்ட வேகம் என்பவற்றைப் பார்க்கும் போது இவர்கள் தமிழ் மக்களை, அவர்களின் வாழ்விடங்களை எங்ஙனம் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

மாவீரர் தினமன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீபம் ஏற்றிய சம்பவத்தை ஒரு சாதாரண நிகழ்வாக படையினர் எடுத்திருந்தால் எந்தப்பிரச்சினையுமே ஏற்பட்டிருக்காது. தேவையாயின் பொலிஸ் பாதுகாப்புடன் மாவீரர் தினத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது கூட தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான ஒரு வழி. இதைவிடுத்து மாவீரர்தினத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தீபம் ஏற்றி விட்டார்கள் என்பதற்காக மாணவர்களை துரத்தித் துரத்தி அடிப்பது, மாணவர்களை கைது செய்வது, பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி படையினரை நிறுத்தி பதற்றமான சூழலை ஏற்படுத்துவதான நிலைமைகள், இனிமேலாவது இலங்கைத் திருநாட்டில் யுத்தத்திற்கு இடம் கொடுக்கலாகாது என்று உளப்பூர்வமாக விரும்புகின்ற தமிழ் மக்களின் மனங்களையும் திசை திருப்பி விடும் என்பது சர்வ நிச்சயம். ஆகையால், பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் எதனையும் சுமுகமாக கையாளப் படையினர் பழகிக் கொள்ள வேண்டும்.

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 02-12.2012 –
http://www.valampurii.com/viewnews.php?ID=35727

Related Posts