பண்பாட்டை அழித்துவிட்டு தமிழருக்கு சேலை வழங்குவதற்கு இவர்கள் யார்? – வேட்பாளர் கஜதீபன்

p-kajatheepanஎமது மக்களின் பண்பாடு, கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்?

இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய பா.கஜதீபன்.

வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் ஏழாலையில் நடைபெற்ற தோதல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எங்களுக்கு வாக்களித்தால் பலாலியில் மக்களை மீளக் குடியமர்த்துவோம் என்று கூச்சலிடுகிறார்கள் அரச கட்சியில் போட்டியிடுபவர்கள். தமக்கு தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காகவா இவர்கள் மீள்குடியேற்றத்தை செய்யாமல் வைத்துள்ளார்கள்? மக்களின் இடப்பெயர்வின் வலியை தங்களுக்கான சுயலாப அரசியலுக்காக பயன்படுத்த முனைகின்றனர்.

இவர்களால் எமது இனத்துக்கு ஒருபோதும் விடிவு ஏற்படப்போவதில்லை. இவர்களுக்கு மக்கள் தங்கள் வாக்கு ஆயுதத்தினால் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

எமது மக்களுடன் தொடாபில்லாதவர்கள், மக்களின் அத்தியாவசிய தேவைகளை சற்றும் இனங்காணாதவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் புதிதாக முளைத்துள்ளார்கள்.

இவர்களுக்கு மக்களின் பிரச்சினை பற்றி என்ன தெரியும்? மக்களோடு மக்களாக இந்தப் பிரதேசத்திலே வாழ்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. எமது மக்களின் பிரச்சினையில் நாம் தான் பங்கெடுத்துள்ளோம்.

இவர்கள் தேர்தலை ஒட்டி இங்கு வந்து ஆயிரம் மலசலகூடம் தருகிறோம் என்றும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருகின்றோம் என்றும் கூறுகிறார்கள். இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு என்றைக்கும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள்.

ஈழத் தமிழர்கள் தன்மான முள்ளவர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் சலுகைகளுக்கும் பசப்பு வார்த்தைகளுக்கும் விலை போகமாட்டார்கள்.

எமது மக்கள் அனைவரும் இந்த மாகாண சபைத் தோதலில் ஒருமித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும் பான்மை ஆசனங்களால் எம்மைப் பெரு வெற்றியீட்ட வைக்கவேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரன், வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களான கெளரிகாந்தன், ஜோன் ஜிப்´க்கோ, யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலருமான தர்ஷானந்த் ஆகியோர் உரையாற்றினர்.

Related Posts