பணியைத் தொடருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்குப் பணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில் – புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான இழுபறிகளுக்கு மத்தியில், புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வரை பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தைத் துணைவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா நேற்று மாலை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதேவேளை,

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவுக்காக கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் முன்னிலை வகித்த பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி இம்மாதம் 4ஆம் திகதி சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக வெளிவந்திருந்தது. எனினும், சில இராஜதந்திர அழுத்தங்களின் காரணமாக அந்தச் செய்தியை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி “யார் துணைவேந்தர்?” என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா நேற்று இந்த அறிவித்தலை அனுப்பி வைத்திருக்கிறார்.

புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் இன்னும் ஓரிரு தினங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts