இலங்கையிலிருந்து 269 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பலகோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டு ஆபிரிக்க நாடுகளான டோஹோ மற்றும் மாலி முதலான நாடுகளுக்கு கூட்டிச்சென்று அநாதரவான நிலையில் அவர்களைக் கைவிட்ட பிரதான சந்தேக நபரான அருணகிரிநாதன் ஜெயரூபனைக் கைதுசெய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பலகோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்குத் தகவல்களை வெளியிடும்போதே குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொறுப்பதிகாரி ஜனக சமிந்த மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
கனடாவுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக் கூறியே மேற்படி நபர் 269 பேரை ஆபிரிக்க நாடுகளான டோஹோவுக்கும், மாலிக்கும் அனுப்பியுள்ளார். குறித்த நபர் பற்றி கிடைத்த இரகசியத் தகவலொன்றின் மூலம் சந்தேக நபரைப் பின்தொடர்ந்த நாம் வெள்ளவத்தையிலுள்ள விடுதியொன்றில் வைத்துக் கைதுசெய்தோம்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வடமராட்சி புலோலியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. இவரது மூத்த அண்ணனான அருணகிரிநாதன் ஜெயபரன் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபல உறுப்பினராக இருந்து யுத்தத்தின்போது இறந்துவிட்டார்.
இரண்டாவது அண்ணன் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். மூன்றாவது அண்ணனான ஜெயஸ்ரீதரன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றார். நான்காவது அண்ணனான ஜெயபிரகாஷ் இத்தாலியில் வசித்துவருகின்றார்.
கைது செய்யப்பட்ட ஜெயரூபன் வவுனியா பிள்ளையார் கோயில் வீதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாணத்தில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றிவந்துள்ளார்.
கனடாவுக்குச் செல்வதற்காக குறித்த நபரிடம் முஸ்லிம்கள் மூவரும், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 266 தமிழர்களும் தலா 5 லட்சம் ரூபா முதல் 25 லட்சம் ரூபா வரையில் கட்டணங்களாகக் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரையும் முன்னாள் விடுதலைப் புலிகள் எனக் கூறுமாறு தெரிவித்து ஆபிரிக்க நாடுகளுக்குக் கூட்டிச்சென்று தங்கவைத்துவிட்டு பின்னர் விசா காலாவதியானதும் அந்நாட்டுப் பொலிஸாரிடம் பிடிபடவைத்து, அவர்களை இலங்கைக்கு மீண்டும் நாடுகடத்த வைப்பதுடன், அவர்களிடமிருந்து பெற்ற பல கோடி ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு வசதியான நாடொன்றுக்குச் சென்று வாழ்வதே இவரின் திட்டமாக இருந்தது.
பணத்தைக் கொடுத்தவர்கள் கனடாவுக்கு அனுப்பப்படாவிட்டால் அவர்களுக்கு மீண்டும் பணம் திருப்பி ஒப்படைக்கப்படுமென வெற்றுத்தாளில் முத்திரையை ஒட்டி கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். ஆனால், இதுவரை எவருக்கும் பணம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை.
டோஹோவில் கைவிடப்பட்ட நிலையில் திறந்தவெளி தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 269 பேரில் 69 பேர் இதுவரை இலங்கைக்குத் தப்பிவந்துள்ளனர் எனவும், மிகுதிப்பேர் அந்நாட்டிலே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகப் பொறுப்பதிகாரி கூறினார்.