பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எமக்கு தீர்வு வேண்டும் : நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள்

“நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என, நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சமாசத்தலைவர் கி.அருள்ஜீவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் நெடுந்தீவு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்கள், தமது தொழில் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கச்சதீவுக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட பகுதி என்பதால், இந்திய இழுவைப்படகுகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தோம். அது தற்போது ஓரளவு குறைவடைந்த நிலையில், அத்துமீறிய உள்ளூர் மீன்பிடி இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவர்கள், எமது சிறுதொழிலாளர்கள் தொழில் புரியும் இடத்தில் மாலை 5 மணி தொடக்கம் அடுத்தநாள் காலை 7 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இழுவை மடித் தொழில் அழிவை ஏற்படுத்தும் தொழில் முறையாகும். இதனால், கடல் வளங்கள் முற்றாக அழிவடையும். இவர்கள் கடலில் சிறுதொழில் மீனவர்களின் வலைகளை அறுத்துச் செல்கின்றனர். இதனால், எமது மீனவர்கள் நட்டத்தை எதிர்கொள்வதுடன், கூலி வேலைகளை நாடிச் செல்கின்றனர்.

இழுவை மடித் தொழிலை நிறுத்தி, பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ள எமக்கு தீர்வைப் பெற்றுத்தர உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Related Posts