பட்டப்பகலில் 32 பவுண் நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணியளவில் வீட்டினை பூட்டிய பின்பு வழமை போன்று பணிக்குச் சென்றுள்ளனர். இதில் கணவர் கூட்டுறவுத் திணைக்களத்திலும் மனைவி ஆசிரியராகவும் பணிபுரிகின்றார்.

இவ்வாறு பணிக்குச் சென்றவர்களின் வீட்டிற்கு ஆசிரியரின் தாயார் 10 மணியளவில் சென்று திரும்பிய நிலையில் அவசர பணி நிமித்தம் ஆசிரியரும் விடுமுறை பெற்று 11 மணிக்கு வீட்டுக்கு சமூகம் தந்துள்ளார்.

இந்த இடைவெளி நேரத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் முகப்புக் கதவினை உடைத்து உள் நுழைந்து வீட்டின் அனைத்து இடங்களையும் சல்லடை இட்டுத் தேடுதல் நடாத்தியுள்ளனர். அவ்வாறு நடாத்திய தேடுதலின்போது மிகவும் சாதுரியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் அதிக விலையுயர்ந்த கவறிங் நகைகளும் இருந்தபோதிலும் அதில் தங்க ஆபரணங்கள் மட்டும் இனங்காணப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஆசிரியரின் தாலிக்கொடி , அட்டியல் , பதக்கம் சங்கிலி மற்றும் சாதாரண சங்கிலி என 32 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு முறையிடப்பட்டதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றபோதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அடுத்த வீட்டில் பொலிஸ் புலனாய்வாளர்கள் தங்கியிருந்த போதிலும் இது நடைபெற்றமை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts