பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்!!

கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹஏஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றது.

கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலலில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹஏஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீவைத்துள்ளது.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் அந்தக் கும்பல் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, 8 பேர் கொண்ட ஒரே கும்பலால் கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் 5 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றது என வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை, பிளவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிலேயே நேற்றுக் காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் இந்தத் திருட்டு இடம்பெற்றது.

கூட்டுக் குடும்பமாக 3 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் சந்தைக்குச் சென்றுள்ளார். ஏனையோர் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் எவரும் இல்லாதவேளை பார்த்து அங்கு புகுந்த கும்பல் ஒன்று 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளது.

சந்தைச் சென்றவர் வீடு திரும்பி வந்து பார்த்த போதே வீடுடைத்து திருட்டுப் போனமை தெரியவந்தது.

உடனடியாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, தொல்புரம் பகுதியில் காலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடியோர் அப்பகுதி இளைஞர்களால் துரத்தப்பட்டு தப்பித்தனர் என்று தெரிவித்தனர்.

Related Posts