பட்டதாரி பயிலுனர்கள் நியமனம் – வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு?

வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணம் முழுமையாக ஆயிரத்து 905 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் 5 மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில் முதல் கட்டமாக 4 ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 16 ஆயிரத்து 800 பேருக்கு நியமனம் வழங்குவதற்கான பெயர்ப் பட்டியல்கள் சகல மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 பட்டதாரிகளிற்கும் வவுனியா மாவட்டத்தில் 199 பட்டதாரிகளிற்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 281 பேரின் பட்டியலும் மன்னார் மாவட்டத்தில் 140 பேரின் பட்டியலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 149 பேரின் பட்டிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே மொத்தம் 1905 பேரின் பெயர் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பெயர் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனைவரும் எதிர் வரும் முதலாம் திகதி முதல் நியமிக்கப்படும் இடங்களில் தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும். எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அவர்களிற்கான நியமனங்கள் மாவட்டந்தோறும் 40 பேரிற்கு பி்தமர் அலுவலகத்திலும் ஏனையோருக்கு மாவட்டச் செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படவுள்ளது.

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடயம் தொடர்பில் குறித்த அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியை தொடர்பு கொண்டு கேட்டபோது,

தற்போது வெளியாகியுள்ள பட்டதாரிகள் பட்டியலில் மிகச் சொற்பமானோரே வெளிவாரிப் பட்டதாரிகள் உள்ளனர். ஆனால் அடுத்த கட்டமாக மிகவிரைவில் அடுத்த மாதமும் ஓர் 3 ஆயிரத்து 800 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதில் அனைவருமே வெளிவாரிப் பட்டதாரிகளே உள்ளனர்.
என்றார்.

Related Posts