பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை நாளை தங்கள் கடமைகளை பொறுப்பேற்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆயிரம் பேர் வரையில் பட்டதாரிப் பயிலுநர்களாக சகல பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் தோறும் நியமிக்கப்பட்டனர்.
இவர்களிலிருந்து முதலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தனக்கான வெற்றிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தியது. இதனடிப்படையில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் ஒருவரும் பிரதேச செயலகம் தோறும் மூவர், மாவட்ட செயலகத்தில் ஐவரும் என்ற அடைப்படையில் தேர்வு நடைபெற்றது.
இதற்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு நாளையதினம் அவர்களது கடமைகளை பொறுப்பேற்றுகுமாறு அரச அதிபர் ஒப்பமிட்ட கடிதத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டபோது, சகல அமைச்சுகள், திணைக்களங்களுக்கும் பட்டதாரி பயிலுநர்கள் தெரிவு செய்யப்படுவர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நேர்முகத் தேர்வுகள் முதலில் நடைபெற்றதால் அவர்களுக்கான நியமனங்கள் முதலில் வழங்கப்படுகின்றன. ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களது விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.