சுதந்திர பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 12.1.2013 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.அம்மாநாட்டுக்கு அண்மையில் நியமனம்பெற்ற சகல பட்டதாரிகளும் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமது செலவில் சென்று வரவேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.
குறைந்தது 2000 ரூபா வரையில் இதற்காக இவர்கள் செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் இது பிரதேச செயலகங்களுக்கு அங்குள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.10,000 ரூபா சம்பளத்தில் பயிலுனர்களாக உள்ளவர்களிடம் சொந்த செலவில் கட்டாயம் சென்று வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருப்பது அநியாயமானது என பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கமானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த ஒரு தொழிற்சங்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் தெரிய வருகையில் இலங்கை உள்நாட்டு அலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சினால் இவர்களுக்கு கடமை விடுமுறை அளிக்குமாறு கூறி ஒரு சுற்றுநிருபம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாம்.வேலை வழங்கு முன்னரும் வழங்கிய பின்னரும் இவ்வாறு பட்டதாரிகளை அரசியல் நடவடிக்கையில் வலுக்கட்டாயமாக அதுவும் சொந்த செலவில் ஈடுபடுத்துவது அடிப்படைமனித உரிமை மீறல் என்றபொழுதிலும் எந்த ஒரு பட்டதாரியும் இதுதொடர்பில் முறையிட தயாரற்ற தர்மசங்கட நிலையில் உள்ளதாக தெரியவருகிறது.
எங்கே தமது வேலைவாய்ப்பு நிரந்தரமாக்கப்படாது பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தில் விதியை நொந்தவாறு வெள்ளிக்கிழமை பயணத்திற்கு தயாராகிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.