இளைஞர்களையும், வேலையற்ற பட்டதாரிகளையும் பகடைக்காய்களாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுவிட்டு அவர்களை நடுத்தெருவில் விடும் அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரப் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பட்டதாரிகளுக்கான கலந்துரையாடல் ஒன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இதுவரை வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்கள் பல அரசியல் கட்சிகள் சிலவற்றைச் சார்ந்து இயங்கிவந்தன. சுயநலனில்லாது இந்தச் சங்கத்தை உருவாக்கிப் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளேன்.
இளைஞர்களினதும் வேலை யற்ற பட்டதாரிகளினதும் சேவைகளைத் தகுந்த முறையில் நாட்டுக்குப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று எமக்குத் தேவையானது நிம்மதியான வாழ்வும், நாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் கல்வியும், உத்தி யோகமும், அபிவிருத்தியும் அதன் மூலமாக எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே.
ஒருவருடைய சந்தோஷத்தை எழுதும் பென்சில் போலல்லாது குறைந்தது ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நீக்கக்கூட்டிய அழி இறப்பர்போல் என்றாலும் இருக்க வேண்டுமென்பதே எமது நோக்கம் என்றார்.