படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படாது! – பாதுகாப்புச் செயலாளர்

தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ,

வடக்கில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. அது தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பிலும் அரசாங்கத்தின் ஒரு சிலரையும் இணைத்து குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவினர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த வாரத்திலும் நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினோம். அப்போதும் வடக்கில் காணிகளை விடுவிக்கும் வகையில் காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் தேசிய பாதுகாப்பு விடயத்திலும் அதிக அக்கறை காட்டவேண்டும். ஆகவே வடக்கில் தேசிய நலனுக்கு தேவைப்படும் காணிகளை விடுவிக்க முடியாது. எனினும் அந்த இடங்களில் பொது மக்களின் காணிகள் இருக்குமாயின் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நபர்களிடம் பேசவும் நாம் தயாராக உள்ளோம்.

அதேபோல் வடக்கில் உள்ள படைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் இதுவரையில் பாதுகாப்பு தரப்பில் எமக்கு எந்தவிதக் கட்டளைகளும் கிடைக்கப்பெறவில்லை. வடக்கில் பாதுகாப்பு படைகளின் தேவை அவசியமானது. அரசியல் காரணிகளுக்காக பாதுகாப்பு படைகளை வெளியேற்றி சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்றார்.

Related Posts