‘படம்பிடித்து அச்சுறுத்தவில்லை’

போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது.

“படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தேவையும், அம்முகாமில் உள்ள அதிகாரிகள் வசம் உள்ளது. அதனால், தங்களது பாதுகாப்புக்காக அவர்கள் புகைப்படம் எடுத்திருக்கலாம்” என்று, விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் காணி விடுவிப்பை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தை, விமானப் படையினர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்ததாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“படை முகாமுக்கு முன்னால், பிரிதொரு தரப்பினர் ஆர்ப்பாட்டமொன்றையோ அல்லது வேறேதேனும் நடவடிக்கையிலோ ஈடுபட்டிருந்தால், அது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு, அந்தப் படை முகாம் தளபதிக்குரியது. அதனால், தங்களுக்குரிய தேவையைத் திரட்டி வைத்துக்கொள்வதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை, புகைப்படமோ அல்லது வீடியோப் பதிவோ செய்திருக்கலாம்.

படைத்தரப்பினர் எடுத்ததை விட, ஊடகவியலாளர்கள் பலர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைப் புகைப்படம் எடுத்துள்ளனரே, அதனால், அம்மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா? அது போலத்தான், தங்களது தகவல் திரட்டுக்கா எடுக்கப்பட்ட புகைப்படங்களால், பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படப்போவதில்லை. அது குறித்து, அம்மக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்று, அவர் மேலும் கூறினார்.

Related Posts