நடிகர் அஜித்குமாருக்கு படப்பிடிப்பின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. அவருடைய காலில் அடிபட்ட இடத்தில், ‘ஆபரேஷன்’ செய்வது பற்றி டாக்டர்கள் ஒரு வாரத்தில் முடிவு செய்கிறார்கள்.
அஜித்குமார் இப்போது, ‘வேதாளம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். சிவா டைரக்டு செய்கிறார். பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வர இருக்கிறது.
‘வேதாளம்’ படத்துக்காக அஜித்குமார் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி, சென்னை பின்னி மில்லில் நேற்று படமாக்கப்பட்டது. அஜித்குமார் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, அவருடைய வலது காலில் ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபட்டது. வலி அதிகமாக இருந்ததால் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு கட்டு போடப்பட்டது.
அஜித்குமார், ‘ஆரம்பம்’ படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது. இதற்காக அவருடைய காலில் ‘ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள். ஓய்வே இல்லாத படப்பிடிப்பு காரணமாக அஜித்குமார் அந்த ‘ஆபரேஷனை’ தள்ளிப்போட்டு வந்தார்.
இந்த நிலையில், அவர் காலில் மீண்டும் அடிபட்டிருப்பதால் வலி அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த காலில் ‘ஆபரேஷன்’ செய்வது பற்றி ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதுவரை அஜித்குமார், ‘வேதாளம்’ படத்துக்காக டப்பிங் பேசுவார் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.