கடந்த வாரம் முன்னர் லிபியா கரையோர பிரதேசத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வெவ்வேறு படகு விபத்துக்களில் சுமார் 700 பேர் தஞ்சம் கோரி பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் முகவர் அமைப்பு (UNHCR) தெரிவித்துள்ளது.
கடந்த புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற படகு விபத்துக்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் முகவர் அமைப்பின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கு தெற்காக உள்ள கடற்பிரதேசத்திலேயே இப்படகு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
நீண்ட தூர பயணத்திற்கு பொருத்தமற்ற படகுகளினூடாக ஐரோப்பாவை சென்றடைவதே விபத்தில் உயிரிழந்தவர்களின் நோக்கமாகும். இத்தாலிய கடற்படையின் கமராவில் சிக்கிய ஒரு படகிலிருந்த 135 பேர் காப்பாற்றப்பட்டனர். அத்துடன் 45 சடலங்களும் கைப்பற்றப்பட்டன.
குறித்த படகின் இயக்குனர் கருத்து தெரிவிக்கையில் அமைதியாக இருக்குமாறு கூறிய போது அதனை கவனத்திற் கொள்ளாமல் செயற்பட்டமையே படகு கவிழ்ந்ததற்கு காரணம் என்று தெரிவித்தார். எது எவ்வாறு இருப்பினும் உயிரிழந்த பல நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பணியாற்றும் விசேட கடற்படை பாதுகாப்பு குழு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஐ தாண்டக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.