இளவாலை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளை ஞாயிற்றுக்கிழமை (15) தீயிட்டு எரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேந்தான்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பேரை திங்கட்கிழமை (16) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
எரிந்த படகுகளுக்கு அருகில் கிடந்த பெனியன் மற்றும் லைற்றர் ஆகியவற்றை கொண்டு மோப்பநாயின் உதவியுடன் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சகோதரர்களான பாக்கியநாதன் றேகன் மற்றும் பாக்கியநாதன் கமில்ரன் ஆகியோருடைய இரண்டு படகுகள், இரண்டு படகு இயந்திரங்கள் 40 வலைகள் என்பன இவ்வாறு எரிக்கப்பட்டன.
இரண்டு படகுகள் எரிவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் ஒரு படகை கடலுக்குள் தள்ளி தீயை அணைத்தமையால், அரைவாசி எரிந்த நிலையில் ஒரு படகு மீட்கப்பட்டது. இதனால் இரண்டு மீனவர்களுக்கும் 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.