இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில் துன்புறுத்தப்படும் அபாயம் உள்ளவர் என்ற அடிப்படையில் அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிரந்தர வதிவிட உரிமை பெற்றுள்ள அவர், மெல்பேர்னில் வசித்து வருகிறார்.
இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள படகில் இருந்த- ஆனந்தி ( உண்மையான பெயர் அல்ல) உள்ளிட்ட சிலருடன் சிறிலங்காவில் தானும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கரிகாலன் தெரிவித்துள்ளார்.
பத்து நாட்களுக்கு முன்னர் படகில் இருந்தவர்கள் செய்மதி தொலைபேசி மூலம் பேசியதாகவும் அதற்குப் பின்னர் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்றும் கரிகாலன் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தாக கூறி, 2005ஆம் ஆண்டு, கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கரிகாலன் கூறுகிறார். இவரது இரண்டு சகோதரர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போரில் இறந்து விட்டனர்.
ஆனந்தியும் அவரது கணவர் வசந்தும் இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்ததாக கரிகாலன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் தம்முடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், தினமும், தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் கரிகாலன் குறிப்பிட்டுள்ளார்.
“சித்திரவதை செய்யப்படும் போது எம்மால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியும். அவர்கள் எம்மை நிர்வாணமாக்கி விட்டு, அடிப்பார்கள், பைகளில் பெற்றோல் நிரப்பி தலையில் கட்டி அதனை சுவாசிக்கச் செய்வார்கள்.
விரலில் சுத்தியலால் அடிப்பார்கள். நகங்களை பிடுங்குவார்கள். விரல்களை லாச்சிகளுக்குள் வைத்து நசுக்குவார்கள்.நினைவிழக்கும் வரை அடிப்பார்கள்
வசந்த்தினதும் எனதும் பற்களைப் பிடுங்கினார்கள் எனது வாயில் இருந்த பல்லைப் பிடுங்கிய போது, அதன் வேர்கள் விடவில்லை. பல்லை முறித்து எடுத்தார்கள். இறுதியாக அவுஸ்ரேலியா வந்தே, அதனைப் பொருத்தினேன்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ரீதியான வதைகளும், சித்திரவதைகளும் இடம்பெறுவது வழக்கம்.
பின்னர், வசந்தும் ஆனந்தியும் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். அவர்கள் வேறு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும், இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா வந்ததாக, கரிகாலன் தெரிவித்துள்ளார்.
வசந்தும், ஆனந்தியும் சிறிலங்கா சென்றால் சித்திரவதை செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனந்தியின் படத்தை நாளிதழில் பார்த்தேன். அதில், தலையில் துப்பாக்கியை வைத்து சுடுவது போன்று, தனது கையை வைத்துள்ளார். அதன் அர்த்தம் எனக்குத் தெரியும்.
மீண்டும் சிறிலங்காவுக்கோ இந்தியாவுக்கோ திருப்பி அனுப்பப்படுவதை விட இறப்பதே மேல் என்பதையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருக்கலாம். அவ்வாறு நடந்தால் அவர்கள் தம்மை மாய்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.