பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்யுமா? எஸ்.ஆர்.ரமணன் பதில்

வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டியது. அதிலும் குறிப்பாக கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முதல் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

ramanan

இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல் ஒரு வாரம் கனமழை பெய்யும் என்றும், 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), புயல் பலமாக சென்னையை உலுக்கும் என்றும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பல்வேறு ஜோதிடர்கள் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த தகவல் வேகமாக வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், நாசா விண்வெளி மையமும், இதேபோல் வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்றும், இதுவரை இல்லாத அளவில் 250 செ.மீ. மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் வாட்ஸ்-அப்பில் தகவல் வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழையில் இருந்து, இன்னும் மீண்டு எழ முடியாமல் தவிக்கும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி பொதுமக்களிடம் இந்த தகவல்கள் ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை நான் ஒரு விஞ்ஞானி. உலக வானிலை வழிகாட்டுதல் படி, செயற்கைக்கோள் தரும் தகவல்களை கொண்டு தான் அவ்வப்போது மழை வருமா? வராதா? என்பதை தெரிவிக்கிறேன். தற்போது வடகிழக்கு பருவமழை காலம். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகம் எப்போதுமே மழை பொழிவை பெறும். அந்த வகையில் தற்போது மழை பெய்துள்ளது. இனியும் மழை வரும்.

ஆனால் வாக்கிய முறை பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் பலத்த மழை வருமா? என்று என்னிடத்தில் கேட்காதீர்கள். அது எனக்கு தெரியாது. வானிலை தகவல்படி, அடுத்தகட்டமாக பலத்த மழையோ, எந்த ஒரு புதிய நிகழ்வோ (புயல்) இல்லை. வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்கள் பற்றியும் எனக்கு தெரியாது.

பொதுமக்கள் வானிலை குறித்து தெரிய வேண்டும் என்றால், வானிலை ஆய்வு மைய இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். அதில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படி இல்லையென்றால், வானிலை ஆய்வு மையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts