வானத்தில் சுழலும் நவகிரகங்களின் இயக்கம், அதனால் உலகில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தொடர்பான குறிப்புகள் அடங்கியது ‘பஞ்சாங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில், முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை சுலோகங்களாக (பாடல்களாக) எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.
இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச்சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர்.
பஞ்சாங்கம் இருவகைப்படும். 1. திருக்கணித பஞ்சாங்கம், 2 வாக்கியப்பஞ்சாங்கம். இந்த இரண்டு பஞ்சாங்கங்களின் கணிப்புகளுக்கு இடையே 6 மணி 48 நிமிடம் வித்தியாசம் இருக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்’ எனப்படும். சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுவது ‘திருக்கணித பஞ்சாங்கம்’ ஆகும்.
வாக்கிய முறை பஞ்சாங்கத்தை பல்வேறு ஜோதிடர்களும் வெளியிட்டு வருகிறார்கள்.
அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.