பங்களாதேஷை எளிதாக வென்றது இந்தியா

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நேற்று தொடங்கியது. மார்ச் 6–ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கின்றன.

asia-cup

ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 20 ஓவர் உலகக் கிண்ணம் நடைபெற இன்னும் இரு வாரங்கள் இருப்பதால் இந்தப்போட்டி இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றது.

இதன்படி நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.

முதலில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி தலைவர் தோனி முதுகு பகுதியில் காயம் அடைந்ததால் இன்றைய தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருந்த நிலையில், உடல் தகுதி பெற்று நேற்றைய போட்டியில் களமிறங்கினார். இந்திய அணியில் ரகானேவிற்கு பதிலாக வீராட் கோலி சேர்க்கப்பட்டிருந்தார்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் மற்றும் தவானை ஓட்டங்களை எடுக்க விடாமல் தடுமாற வைத்தார்கள். இருவரும் ஆரம்ப கட்ட ஓவர்களில் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் திணறினார்கள்.

தவான் இரண்டு ஓட்டங்கள் எடுத்திருந்த போது அல்-அமீன் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய கோலியும் (8), ரெய்னாவும் (13) சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மறுமுனையில் ரோகித் சர்மா பங்களாதேஷ் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 16 பந்துகளில் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டியா களமிறங்கினார். இதன் பிறகு இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ரோகித் – பாண்டியா ஜோடி 18 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து அசத்தியது.

கடைசி பந்தில் தோனி சிக்ஸ் அடிக்க, இந்தியா 20 ஓவர்களில் 166 ஓட்டங்களைக் குவித்தது. ரோகித் சர்மா 55 பந்துகளில் 83 ஓட்டங்களையும், பாண்டியா 18 பந்துகளில் 31 ஓட்டங்களையும் குவித்தனர். பங்களாதேஷ் தரப்பில் அல்-அமீன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. 10 ஓவர்கள் முடிவில் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது பங்களாதேஷ் அணி.

அந்த அணித் தரப்பில் சபீர் மட்டும் 32 பந்துகளில் 44 ஓட்டங்களைக் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதன்படி அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் அதிகப்பட்சமாக நெஹ்ரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக 83 ஓட்டங்களைக் குவித்த ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

Related Posts