குப்பையை சேகரித்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையை 7வயது சிறுவன் பராமரித்து வரும் சம்பவம் சீனாவில் அனைவரையும் உருகச் செய்துள்ளது.
சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒவு டோங்மிங். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு மாடி கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்ததில், பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்ததில், அவர் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருந்த பணமும் செலவாகி விட்டது. இதைத்தொடர்ந்து அவரது 7 வயது மகன் ஒவு யாகலினை அவருடன் விட்டு விட்டு, மனைவி பிரிந்து சென்று விட்டார்.
அன்று முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அந்த சிறுவன் பராமரித்து வருகிறான். காலை 6 மணிக்கு விழிக்கும் சிறுவன் யாகலின் காலை உணவை சமைத்து தனது தந்தைக்கு ஊட்டிவிட்டு, பள்ளிக்கு செல்கிறான். பள்ளி முடித்து வீடு திரும்பியதும் மதிய உணவை சமைத்து தந்தைக்கு கொடுக்கிறான்.
அதையடுத்து, அவன் தெருக்களில் உள்ள குப்பைகளைச் சேகரித்து, அதை பணமாக மாற்றி, தனது குடும்ப செலவுக்கும், தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கும் செலவு செய்கிறான். இதனால், அவன் மற்ற சிறுவர்களைப் போல் ஒருபோதும் விளையாடச் செல்வதில்லை.
அந்த சிறுவனின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதும், தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருக்கிறார். ஆனால், தனது மகனின் பராமரிப்பை பார்த்து மனம் மாறிய அவர், தான் இல்லாவிட்டால், மகனின் வாழ்க்கை வீணாகப் போய் விடும் என்று நினைத்து தனது முடிவை தற்போது மாற்றியிருக்கிறார்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை, குப்பை சேகரித்து பராமரித்து வரும் சிறுவனின் செயல் அனைவரையும் உருகச் செய்துள்ளது.