பக்கச்சார்பாக நடக்க வேண்டாம்; யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு அறிவித்தல்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார்.

Prof.-Vasanthy

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில், கடந்த 24 ஆம் திகதி, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முறைப்பாடு பதிவு செய்திருந்தது.

யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு, ஆசிரியர் சங்கத்தால் செய்யப்பட்ட முறைப்பாடு தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, அது தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் வழங்கியிருந்தார். தேர்தல் ஆணையாளரின் அறிவித்தல் தொடர்பில் குகநாதனிடம் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இவ்வாறான, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச் செயல்களில் மீண்டும் ஈடுபடவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பக்கச்சார்பாக நடக்கக்கூடாது எனவும் துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குகநாதன் தெரிவித்தார்.

Related Posts