பகிரங்கமாக குறிப்பிட்ட விடயங்களை சஜித் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பாரிய விளைவுகள் ஏற்படும்!! – சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தினால் தமிழ் மக்களை பழிவாங்கும் மோசமான செயற்பாட்டில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இதனுடாக நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பது உறுதியாகியுள்ளது. எம்முடன் இணங்கிய விடயங்களையும், பகிரங்கமாக குறிப்பிட்ட விடயங்களையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நிறைவேற்ற வேண்டும், இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டன் பின்னர் அதிகார பகிர்வு விவகாரம் குறித்து எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதற்கமைய 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சர்வக்கட்சி மாநாட்டை நடத்தினார். எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த சர்வக்கட்சி கூட்டத்தின் 5 சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்துக் கொண்டோம்.

75 ஆவது சுதந்திரத்துக்கு முன்னர் அதிகார பகிர்வு உள்ளிட்ட அடிப்படை விடயங்களுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.ஆனால் ஏதும் நடக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடக்கணக்கில் தாமதப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை நான் கடந்த காலங்களில் முன்வைத்திருந்தேன்.

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சட்ட நிலையியல் குழுவில் அவதானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு செவ்வாய்க்கிழமை (3) மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் அது சேர்க்கப்படவில்லை. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் வெளியக அழுத்தத்தினால் மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடியது. சுமார் ஐந்து மணித்தியாலங்கள் கலந்துரையாடி, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க போவதில்லை என்ற தீர்மானத்தை திட்டவட்டமாக எடுத்தோம். எமது மக்களையும், தேசியத்தையும் கருத்திற் கொண்டு இந்த துணிச்சலான தீர்மானத்தை எடுத்தோம்.இந்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்தோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எமது மக்களுக்கு குறிப்பிடும் பொறுப்பு எமக்கு உண்டு.

இவ்வாறான பின்னணியில் தான் செவ்வாய்க்கிழமை (3) மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம் தடுக்கப்பட்டுள்ளது. இதனையே அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட வேண்டும். இந்த ஒரு செயற்பாட்டின் ஊடாக தான் யார் என்பதை ஜனாதிபதி மீண்டும் நிரூபித்துள்ளார்.

வாய் சொல்லால் பல வாக்குறுதிகளை வழங்குவதும், அதை நடத்துவதை போன்று காண்பிப்பதும், இறுதி தருவாயில் வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தாமல் இருப்பதும் ரணில் விக்கிரமசிங்கவின் சுபாவம் என்பதை இந்த தருணத்திலும் காண்பித்துள்ளார்.

பிரதான தமிழ் கட்சி தனக்கு ஆதரவு வழங்காமல் இருக்க எடுத்த தீர்மானத்துக்காக தமிழ் மக்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அரைகுறை தீர்வாகவுள்ள மாகாண தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு மிக மோசமான நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார்.ஜனாதிபதியின் இந்த செயற்பாடு நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுத்த தீர்மானம் சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் போதும் இதனை ஒரு எச்சரிக்கையாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர் எம்முடன் இணங்கிய விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் இந்த நாடு அழிவு பாதைக்கு செல்லும். சஜித் பிரேமதாச வழங்கியுள்ள வாக்குறுதிகளுக்கு அமைய கடந்த முறையும் எமது மக்கள் அவருக்கு பெரும்பாலும் வாக்களித்தார்கள்.

தமிழ் மக்கள் இம்முறையும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் சென்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ள விடயங்களை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன் என்றார்.

Related Posts