பகிடிவதையில் மாணவன் மரணம்: மற்றொரு மாணவனுக்கு மரணதண்டனை

judgement_court_pinaiபேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கடத்திசென்று கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனை குற்றவாளியாக இனங்கண்ட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி கடத்திசெல்லும் போது இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன் சிரேஷ்ட மாணவனாவார்.

பிரதிவாதியான பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன், 2004 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டதால் அவர் இல்லாமலே வழக்கு விசாரணைக்கு நடைபெற்றது.

வழக்கின் தீர்ப்பை நேற்று அறிவித்த நீதிபதி, நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள இந்த குற்றவாளியை இன்டர்போல் பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சிவபால சுந்தரம் கிருபாகரன், வரபிரகாஷ் கொலைசெய்யப்பட்ட இடத்தில் இருந்தபோதும் இக்கொலையுடன் அவருக்கு நேரடியான தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்பிரகாரம் இரண்டாவது பிரதிவாதிக்கு 1500 ரூபா தண்டம் விதித்த நீதிபதி, மரணமடைந்த செல்வவிநாயகர் வரபிரகாஷின் தந்தைக்கு ஒரு இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும் பணித்தார்.

Related Posts