பகல்–இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3–வது நாளிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா– நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பகல்–இரவு மோதலாக கடந்த 27–ந்தேதி அடிலெய்டில் தொடங்கியது. இது, வரலாற்றின் முதல் பகல்–இரவு டெஸ்ட் என்பதால் இந்த போட்டி உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதற்கு என்று பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 202 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 22 பின்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2–வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அறிமுக வீரர் மிட்செல் சான்ட்னெர் 45 ரன்களும், பிரேஸ்வெல் 27 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாஸ்லேவுட் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை, மின்னொளியில் துரத்த ஆரம்பித்த ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஜோ பர்ன்ஸ் 11 ரன்னிலும், டேவிட் வார்னர் 35 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 14 ரன்னிலும், ஆடம் வோக்ஸ் 28 ரன்னிலும் வெளியேறினர். 115 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலியா நெருக்கடிக்குள்ளானது.

இந்த சூழலில் சகோதரர்கள் ஷான் மார்சும், மிட்செல் மார்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இருப்பினும் இலக்கை நெருங்கிய சமயத்தில் இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். மிட்செல் மார்ஷ் 28 ரன்னிலும், ஷான் மார்ஷ் 49 ரன்னிலும் (117 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள். விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் 10 ரன்னில் நடையை கட்டினார்.

இறுதியில் பீட்டர் சிடில் (9 ரன்) வெற்றிக்குரிய ரன்னை அடித்து, இரவு 8.47 மணிக்கு ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹாஸ்லேவுட் ஆட்டநாயகன் விருதையும், டேவிட் வார்னர் (3 சதத்துடன் 592 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். சிறப்புமிக்க இந்த டெஸ்ட்டை மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 736 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்டில், எந்த ஒரு வீரரும் சதம் அடிக்கவில்லை. 1993–ம் ஆண்டுக்கு பிறகு அடிலெய்டு மைதானத்தில் சதம் அடிக்கப்படாத டெஸ்ட் இது தான். நியூசிலாந்து அணி, கடந்த 7 டெஸ்ட் தொடர்களை இழந்ததில்லை. 2013–ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி பறிகொடுத்த முதல் தொடர் இது தான்.

Related Posts